கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

அருப்புக்கோட்டை அருகே கண்மாைய ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது.

Update: 2023-05-16 19:24 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே கண்மாைய ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது.

ஆகாயத்தாமரை

அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக செவல்கண்மாய், கரிசல் கண்மாய், மாங்குளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இங்குள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்தநிலையில் பாலையம்பட்டி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் கட்டங்குடி சாலையில் உள்ள செவல்கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.

நிறைந்தும் பயனில்லை

கண்மாய் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளதால் கண்மாயில் உள்ள நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு உள்ள கண்மாயில் குளிப்பதும், வீட்டுத்தேவைக்காக தண்ணீர் எடுத்துச் செல்வதும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

தற்போது கண்மாய் நிறைந்தும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் இந்த கண்மாயில் கழிவு நீரும் கலப்பதால் கண்மாயில் நீர் முழுவதும் அசுத்தமடைந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

எனவே பொதுமக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செவல் கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நீர் ஆதாரத்தை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்