ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புது முயற்சி: 13 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிறுமியை தேடும் போலீசார்
தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி 2 வயதில் மாயமான சிறுமியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை சாலிகிராமம் மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவரது 2 வயது மகள் கவிதா, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி அன்று வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது மாயமானாள். குழந்தை காணாமல் போனது குறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்தார்.
போலீசார் பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்டுகள் கடந்து ஓடினாலும் தங்கள் குழந்தை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் உள்ளனர். குழந்தை கவிதா காணாமல் போன வழக்கை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது தொழில்நுட்ப வசதிகள் கொட்டி கிடப்பதால் அதனை பயன்படுத்தி குழந்தையை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 2 வயதில் மாயமான கவிதா புகைப்படத்தை ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது அவர் 14 வயதில் எப்படி இருப்பார்? என்ற தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கவிதாவின் பழைய படம், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் போஸ்டராக வெளியிட்டு மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.