விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை தரவில்லை
மத்திய, மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாக கூடிய விலை கொடுக்கவில்லை என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறினார்.
மத்திய, மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாக கூடிய விலை கொடுக்கவில்லை என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறினார்.
காத்திருப்பு போராட்டம்
விருதுநகரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமரேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் 80 சதவீதம் பேர் விவசாயிகளாக உள்ளனர். தற்போது அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.
விளைபொருட்கள்
மத்திய, மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை தரவில்லை. மத்திய அரசு 21 விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் 4 பொருட்களை மட்டும் தான் கொள்முதல் செய்கிறது.
இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தான் விவசாயிகள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டத்தை 18 மாவட்டங்களில் நடத்தி வருகிறது.
கவன ஈர்ப்பு
விருதுநகரில் மாவட்ட தலைவர் அமரேசன் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் நடைபெறும் இடத்தில் டிராக்டரை நிறுத்தி கவன ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
10 அம்ச கோரிக்கை நிறைவேறும் வரையில் தமிழக பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.