தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது..!

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2023-05-01 05:56 GMT

சென்னை,

கோடை வெப்பம் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும். அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே மாதத்தில் தொடங்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு 'ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது' என்று சொல்வது போல, மார்ச் மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதிலும் கடந்த மாதத்தில் (ஏப்ரல்) பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி இருந்தன.

ஆரம்பமே இப்படி இருக்கிறது என்றால், 'கிளைமேக்ஸ்' எப்படி இருக்குமோ? என்று சொல்லும் அளவுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கிறது. அதன்படி, வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. 25 நாட்கள் நீடிக்கும் இந்த வெயில் காலம் 28-ந்தேதியுடன் விடைபெறும். எனவே மக்கள் யாரும் மதிய நேரம் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் என்பது போன்ற பெயரை அவர்கள் உச்சரிப்பது இல்லை. இருந்தாலும், கோடை காலத்தின் இறுதி பகுதியான மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை. இந்த ஆண்டை பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் காலம் வாட்டி வதைக்குமா?, இதுவரை பதிவான வெயில் அளவை விட அதிகமாக பதிவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்