நிலுவையில் உள்ள 602 முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 602 முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.

Update: 2023-10-07 18:45 GMT

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தன. இதில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது அமைதியை கெடுக்க அனுமதிக்கக்கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மாநாட்டில் பங்கேற்று திரும்பிய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மாற்றத்தை தேடி என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். பள்ளி செல்வோம் திட்டத்தின் மூலம் பள்ளி செல்லாக்குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாதிய அடையாளங்களை மக்களே முன்வந்து அழிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் தூத்துக்குடியில் புதிய பாதை என்ற திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்த திட்டத்தில் ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் நடப்பதற்காக கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே 10 பேரை அழைத்து மனநல மருத்துவர், வக்கீல் மூலம் ஆலோசனைகள் வழங்கினோம். இந்த வாரமும் 10 பேருக்கு மனநல ஆலோசனைகள் வழங்க உள்ளோம்.

இதற்காக எந்த காரணத்தை கொண்டும் பழைய வழக்குகள் ரத்து செய்யப்படாது. அந்த வழக்குகளை அவர்கள் கோர்ட்டில் எதிர்கொள்ளத்தான் வேண்டும். புதிதாக அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கான நடவடிக்கை ஆகும். இதன்மூலம் பழைய குற்றவாளிகள் திருந்தினால், குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது முதல்கட்டமாக தூத்துக்குடியில் தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏற்கனவே 495 குற்றவாளிகளை 107, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் உதவி கலெக்டர் முன்னிலையில் பிணைபத்திரம் தாக்கல் செய்து உள்ளோம். 137 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி 602 கொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, வழக்கை விரைந்து முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.

அதேபோன்று கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்களை பிடிப்பதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் தலைமையில் 105 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாரமும் தனியாக கூட்டம் நடத்தி, பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படும். இதுபோன்ற நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்து உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் திரும்ப திரும்ப விபத்துக்கள் நடந்த 60 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் தடுப்புகள் அமைத்தல், எச்சரிக்கை போர்டுகள் அமைத்தல், வேகத்தடைகள் அமைத்தல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக 36 இடங்களில் விபத்துக்கள் குறைந்து விட்டன. மற்ற இடங்களில் விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, புகார் மனுக்களை முறையாக விசாரிக்க வேண்டும். தீர்வு காண முடியாத புகார்கள் வந்தாலும், அதற்கு உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புதன்கிழமை தோறும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறோம். இதில் 70 சதவீதம் வரை மனுக்களுக்கு தீர்வு கண்டு உள்ளோம். சொத்து பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, கணவன், மனைவி பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியாது. அதற்கு கவுன்சிலிங் உள்ளிட்டவற்றக்கு பரிந்துரை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்