அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீப திருவிழாவுக்காக அதியமான்கோட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-11 18:45 GMT

கார்த்திகை தீப திருவிழாவுக்காக தர்மபுரி அதியமான்கோட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப திருவிழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இந்த விழாவை முன்னிட்டு களிமண்ணால் ஆன அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவதே சிறப்பாகும். ஆனால் நாகரீக மோகத்தில் ஒரு சிலர் பீங்கான் விளக்கு மற்றும் தீப வடிவிலான மெழுகுவர்த்திகளில் தீபம் ஏற்றுகிறார்கள்.

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகளை சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக ஆர்டர் கொடுத்துள்ளனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சிறு வியாபாரிகளும் அகல் விளக்குகள் கேட்டு முன்பதிவு செய்துள்ளனர்.

தொடர் மழையால் பாதிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக அகல் விளக்குகள் கேட்டு ஆர்டர்கள் வந்துள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 50 முதல் 250 மில்லி எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு முகம், பஞ்சமுகம், பாவை விளக்கு என பல்வேறு வகையான அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு விளக்கு அளவுக்கு ஏற்றார் போல் ரூ.3 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனை வியாபாரிகள் வாங்கி சென்று லாபம் மற்றும் போக்குவரத்து செலவு சேர்த்து விற்பனை செய்கிறார்கள். தற்போது தொடர் மழை காரணமாக அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. களிமண் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகள் வெயிலில் காய வைக்க முடியாத நிலை ஆகிய காரணங்களால் மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமத்தில் உள்ளனர்.

நிவாரணம்

இது தொடர்பாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதியமான்கோட்டையை சேர்ந்த உஷாராணி கூறுகையில், ஒரு மாட்டு வண்டி களிமண் ரூ.1,100-க்கு வாங்குகிறோம். இதில் 20 ஆயிரம் அகல் விளக்குகளை உற்பத்தி செய்யலாம். ஆனால் தொடர் மழை காரணமாக களிமண் கிடைக்காமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும் நாங்கள் 1,000 அகல் விளக்குகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இந்த தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. வேறு தொழிலும் எங்களுக்கு தெரியாது. எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்