செக்கானூரணியில் மீண்டும் ரெயில் நிலையம் -யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

செக்கானூரணியில் மீண்டும் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;

Update:2023-08-08 05:56 IST

திருமங்கலம்,

செக்கானூரணியில் மீண்டும் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கவுன்சிலர்கள் கூட்டம்

திருமங்கலம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்திருந்தனர். செக்கானூரணி பகுதிக்கு மின் மயானம் வேண்டாம். மயானம் செல்வதற்கான பாதை பட்டா இடத்தில் உள்ளதால் பொதுமக்கள் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்ததாக கவுன்சிலர் ஓம் ஸ்ரீமுருகன் தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதற்கான பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வாகைகுளம் கவுன்சிலர் மின்னல் கொடி ஆண்டிச்சாமி கூறுகையில், வாகைகுளத்தில் உள்ள சுகாதார மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மீண்டும் ரெயில் நிலையம்

கொக்குளம் கவுன்சிலர் சிவபாண்டி பேசும்போது, மதுரை- போடி ரெயில் செல்லும் வழியில், செக்கானூரணியில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும். ஏற்கனவே ரெயில் நிலையம் இருந்தது. தற்போது காமராஜர் பல்கலைக்கழகம் பகுதியில் ரெயில் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த செக்கானூரணி ரெயில் நிலையத்தை எடுத்து விட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறினார். இதற்கான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

சாத்தங்குடி ஒன்றிய கவுன்சிலர் பரமன் பேசுகையில், சாத்தங்குடி கிராம பகுதியில் சாக்கடை தூர்வாருவது இல்லை. தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை. வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் இதை சரி செய்ய வேண்டும் என்று பேசினார்.

கவுன்சிலர் ஆண்டிச்சாமி பேசுகையில், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் அரசு அறிவித்துள்ளது. இதே போல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், சங்கர்கைலாசம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்