கோவில்களில் பரிகார பூஜைகளுக்கு பின்பு நடை திறப்பு

சந்திர கிரகணத்தையொட்டி கோவில்களில் நேற்று பரிகார பூஜைகள் முடிந்த பின்பு நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-08 20:31 GMT

சுசீந்திரம்,

சந்திர கிரகணத்தையொட்டி கோவில்களில் நேற்று பரிகார பூஜைகள் முடிந்த பின்பு நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்களில் நடை திறப்பு

குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்பட 490 கோவில்கள் உள்ளன. மேலும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் 644 கோவில்களும், இதுதவிர பல்வேறு தனியார் கோவில்களும் உள்ளது. இந்த கோவில்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். இதுபோல் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடக்கப்படுவது வழக்கம்.

ஆண்டுதோறும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும்போது கோவில்களில் நடை அடைக்கப்பட்டு கிரகணம் முடிந்த பிற்பாடு பரிகார பூஜை செய்து மீண்டும் திறப்பது வழக்கம்.

சந்திர கிரகணம்

இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணம் நேற்று மதியம் 2.39 மணிக்கு ெதாடங்கி மாலை 6.19 மணிவரை நடந்தது. இதையொட்டி மதிய வேளையில் கோவில் நடைகள் அடைக்கப்பட்ட பொழுது கிரகணத்தின் பார்வை கோவிலில் உள்ள மூலஸ்தான விக்கிரகங்கள் மீது படாத வண்ணம் தர்ப்பை புல் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் கிரகணம் முடிந்த பிற்பாடு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடைகள் திறக்கப்பட்டது.

கோவில் நடைகள் திறக்கப்பட்டதும் சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படும் அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் நவக்கிரகங்கள் இருக்கின்ற கோவில்களில் பச்சரிசி, உளுந்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு கொடுத்து சாந்திபரிகாரம் செய்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிரகண நேரத்தில் கோவில் நடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சுசீந்திரம், கன்னியாகுமரி, நாகராஜ கோவில், மண்டைக்காடு மற்றும் பல்வேறு கோவில்களில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பக்தர்களும் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

திருவட்டார் கோவில்

திருவட்டாரில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோவிலில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் நடை திறந்திருந்தது. மாலையில் வழக்கமாக 5 மணிக்கு நடை திறக்கும். நேற்று சந்திரகிரகணம் என்பதால் 1½ மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டது. பின்னர் பரிகார பூஜைகள் செய்யப்பட்டது.

அத்துடன் சாமி சிலைகள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டு தீபாராதனைக்கு பின்னர் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோல், திற்பரப்பு மகாதேவர் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் பூஜை மண்டபத்தில் கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்