3 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு வந்த காமராஜர் மார்க்கெட்

3 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு வந்த காமராஜர் மார்க்கெட்

Update: 2023-01-01 19:37 GMT

தஞ்சை அரண்மனை வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட காமராஜர் மார்க்கெட் காய்கனி கடைகள் திறக்கப்பட்டதையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. முகப்பு பகுதியில் வாகனங்களில் காய்கறிகள் விற்பதை தடுக்க வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காமராஜர் மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காமராஜர் காய்கனி மார்க்கெட் தற்காலிகமாக குழந்தையேசு கோவில் அருகே உள்ள இடத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.20.26 கோடி செலவில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. அதன்படி 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

சாவிகள் ஒப்படைப்பு

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. இருப்பினும் பல்வேறு இடையூறுகள் காரணமாக கடைகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் கலந்து பேசி சுமூக தீர்வு ஏற்பட்டது.

இதையடுத்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. சாவிகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் மார்கழி மாதம் என்பதால் தயக்கம் காட்டினர்.

புத்தாண்டில் இயங்கியது

இந்த நிலையில் வருகிற 1-ந்தேதியான ஆங்கில புத்தாண்டு தினம் முதல் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என வியாபாரிகள் முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி முதல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று முதல் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தன.

மார்க்கெட்டில் உள்ள 201 சின்ன கடைகளும், 87 பெரிய கடைகளும் நேற்று திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. பொதுமக்களும் நேற்று ஏராளமானோர் காமராஜர் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்த நிலையில் மார்க்கெட் செயல்பட தொடங்கியதையடுத்து, நேற்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் பார்வையிட்டனர்.

3 ஆண்டுகளுக்குப்பிறகு...

3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் பழைய இடத்தில் புதிய கட்டிடத்தில் மார்க்கெட் செயல்பட்டதாலும், முதல் நாளில் விற்பனை நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சில வியாபாரிகள் வாடகைக்கு கடைகள் எடுத்திருந்த போதிலும், வாகனங்களில் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வைத்து வியாபாரம் செய்தனர். வாடகைக்கு எடுத்த கடைகளிலும், வாகனங்களில் வைத்தும் என 2 இடங்களில் வியாபாரம் செய்தால் சிறிய கடைகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களால் கடைகளின் வாடகையை கூட செலுத்த முடியாமல் போய் விடும். எனவே மார்க்கெட் முகப்பு பகுதியில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்