22 நாட்களுக்கு பிறகுமேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
22 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கடந்த 7-ந் தேதி மாலை இந்த ஆண்டு 3-வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 24 ஆயிரத்து 100 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்வது குறைந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததால் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 67 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் அளவை விட, திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 22 நாட்களுக்கு பிறகு குறைய தொடங்கியது. அதன்படி நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 119.73 அடியாக குறைந்தது.