மதுரையில் துணிகரம்: ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வீட்டில் 38 பவுன் நகை திருட்டு
மதுரை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வீட்டில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
மதுரை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வீட்டில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் ஊழியர்
மதுரை மகபூப்பாளையம் டிராவல்ஸ் பங்களா ரோட்டில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை மற்றும் அதில் பணிபுரிபவர்களின் குடியிருப்பு உள்ளது. இங்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர் சக்கம்மாள் (வயது 60) வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூத்த மகள் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியிலும், 2-வது மகள் தேனியிலும் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சக்கம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதை கேள்விப்பட்டு அவரது 2-வது மகள் சம்பவத்தன்று மதுரைக்கு வந்தார். அங்கு அவரது தாயாரை பார்த்து விட்டு மறுநாள் காலை ஊருக்கு கிளம்பி சென்று விட்டார். அன்றைய தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை சக்கம்மாள் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.
வீட்டில் நகை திருட்டு
பின்னர் துணிகள் இருந்த பையின் உள்ளே பார்த்த போது அதில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. இதனால் சந்தேகப்பட்டு வீட்டில் பல்வேறு இடங்களில் வைத்திருந்த நகைகளை பார்த்த போது அந்த நகைகளையும் காணவில்லை. இதன்மூலம் மொத்தம் 38¼ பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து அவர் உடனே எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ராஜதுரை திருட்டு தொடர்பாக வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் சக்கம்மாள் நகை வைத்த இடத்தை தெரிந்தவர்கள் தான் திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.