புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய கொடியை கலெக்டர் ஏற்றுகிறார்.;

Update:2023-08-14 00:12 IST

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. கலெக்டர் மெர்சிரம்யா தேசிய கொடியை நாளை காலை 9.05 மணிக்கு ஏற்றுகிறார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்குகிறார்.

மேலும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்காக விழா பந்தல் அமைக்கப்படுகிறது. அதில் இருக்கைகள் போடப்பட உள்ளன. மேலும் தேசிய கொடி கம்பத்திற்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

அணிவகுப்பு ஒத்திகை

காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதைக்காக ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல பள்ளி மாணவ-மாணவிகளும் கலைநிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயுதப்படை மைதானத்திலும், மாவட்டத்தில் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. சுதந்திரதின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்