அ.தி.மு.க. முதல் தி.மு.க. வரை... கு.க.செல்வம் கடந்து வந்த பாதை

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

Update: 2024-01-03 07:20 GMT

சென்னை:

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ஆரம்ப காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்த கு.க.செல்வம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மாள் ஆகியோரின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக விளங்கினார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் இருந்தார். அணிகள் இணைந்தபிறகும் அவர் ஜானகி ஆதரவாளராகவே பார்க்கப்பட்டார். அதேசமயம் கு.க.செல்வமும் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டவில்லை. தனது தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பின்னர் 1997-ல் தி.மு.க.வில் இணைந்தார். பிறகு மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியிலும் இவருக்கு நல்ல மதிப்பு இருந்தது.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் அதிருப்தியில் இருந்த அவர், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.

அதன்பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பா.ஜ.க.வில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

இதையடுத்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தி.மு.க.வுக்கு திரும்பினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு மீண்டும் தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் தொடர்ந்து தி.மு.க.வில் பணியாற்றி வந்த கு.க.செல்வம், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Tags:    

மேலும் செய்திகள்