அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல்: கூட்டுறவு சங்க தலைவர் கைது

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை செல்போனில் மிரட்டிய கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2022-08-31 20:41 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (வயது 37). இவர் அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ளார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர், சம்பவத்தன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை கேட்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அந்த புகாரில், "1-ந் தேதி (இன்று) வாசுதேவநல்லூரில் பூலித்தேவன் ஜெயந்தி விழாவுக்கு வரும் முன்னாள் அமைச்சர் ஆா்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்" என்று கூறியிருந்தார்.

இதேபோல் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

கைது

இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இதுதொடர்பாக சரவணபாண்டியனை நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்