ஆரணியில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை

ஆரணியில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-01 13:30 GMT

ஆரணி

ஆரணியில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.பிரமுகர்

ஆரணி வி.ஏ.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். அ.தி.மு.க. மீனவரணி நிர்வாகியாக உள்ள இவர் தமிழ்நாடு தலைமை மீனவர் இணையத்தின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் ஆரணி காந்தி ரோட்டில் ஆட்டோ கன்சல்டிங் மற்றும் ஆட்டோ பைனான்ஸ் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் சென்னை மதுரவாயில் பகுதியில் வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.

கடந்த 27-ந் தேதி கணவன், மனைவி இருவரும் சென்னையில் நடந்த தமிழ்நாடு தலைமை மீனவர் இணையத்தின் 16-வது மகா சபா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர்.

அதனை கண்காணித்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

கொள்ளை

இந்த நிலையில் நேற்று பகலில் வீடு திரும்பிய ஆனந்த் பூட்டு உடைக்கப்பட்டு உள்கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகளும் ரூ.5 லட்சம் ரொக்கமும் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆரணி நகர போலீசில் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களையும் பதிவு செய்தனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் சம்பவம்

ஏற்கனவே அதே பகுதியில் பஸ் அதிபர் வீட்டில் சுமார் 25 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பானது, அதேபோல பாலாஜி மோட்டார்ஸ் உரிமையாளர் பத்மநாபன் வீட்டிலும் பீரோவை உடைத்து நகைகள் கொள்ளை போன சம்பவம் நடந்துள்ளது.

கோவில் உண்டியல் உடைப்பு, வீடு புகுந்து திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை பிடிபடவலில்லை. தொடர் கொள்ளை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்