தலையில் கல்லைப்போட்டு அ.தி.மு.க. பிரமுகர் கொலை

மீஞ்சூர் அருகே வீட்டின் அருகே படுத்து தூங்கிய அ.தி.மு.க. பிரமுகர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-05-28 21:45 GMT

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சநாதன்(வயது 57). இவர், அ.தி.மு.க.வில் 3-வது வார்டு செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததுடன், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலையும் செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும், ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். இவர், தனது வீட்டின் முன்புறம் புதிதாக 2 கடைகள் கட்டி உள்ளார்.

கல்லைப்போட்டு ெகாலை

நேற்று முன்தினம் இரவு பஞ்சநாதன், புதிதாக கட்டிய கடைக்கு அருகில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பஞ்சநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் அருகில் கல் கிடந்தது. மர்மநபர்கள் அவரது தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி மாநகர போலீஸ் உதவி கமிஷனர் கபிலன், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான பஞ்சநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் பஞ்சநாதன் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்லும்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுபற்றி ஏற்கனவே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மீண்டும் மர்மநபர்கள் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்