தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், உடனடியாக அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், உடனடியாக அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ரெயிலடியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, ராமச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.
வெள்ளை அறிக்கை
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-
தி.மு.க.வின் 15 மாதகால ஆட்சியில் என்ன செய்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்குவோம், கியாஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்குவோம், நீட் தேர்வை தூக்கி எறிவோம், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என மு.க.ஸ்டாலின் கூறினார். இவைகளில் எதையாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா?. அதற்கு பதிலாக மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறீர்கள். ஏன் உயர்த்தினீர்கள் என்று கேட்டால் மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்கிறார்கள். மின் கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டோர்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒருங்கிணைந்த மாவட்ட அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி, மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், மாநகராட்சி கவுன்சிலர் கோபால், மாவட்ட துணைச்செயலாளர் தவமணி மலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சசிகலா-வைத்திலிங்கம் சந்திப்பு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மின் கட்டண உயர்வை தி.மு.க. அரசு உடனடியாக குறைக்க வேண்டும். அப்படி குறைக்காவிட்டால் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அதில் எடுக்கும் முடிவின்படி அ.தி.மு.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.சசிகலா-வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட செயலாகும். யார்(சசிகலா) எது சொன்னாலும் அவர்கள் ஆசைக்கு சொல்லிக் கொள்ள வேண்டியது தான். அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டுமே தவிர அதை அழிக்க நினைக்கக் கூடாது. தி.மு.க.வுக்கு துணை போவது அ.தி.மு.க.வை அழிக்கும் வேலையாக தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.