எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - சென்னையில் நாளை மறுதினம் நடக்கிறது

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

Update: 2023-09-01 19:39 GMT

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

மதுரையில் கடந்த மாதம் 20-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுவினருடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் களப்பணி, தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மதுரை மாநாடு சிறப்பாக நடைபெற்றதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம் அடைந்தார். எனவே இந்த கூட்டத்தில் அவர், மாநாட்டு குழுவினரை பாராட்டி கவுரவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்