தி.மு.க.வுக்கு மாறுவேன் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேட்டி

தி.மு.க.வுக்கு மாறுவேன் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமி பேசினார்.

Update: 2022-09-18 23:25 GMT

கோவை,

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சியில் நடந்த வருமுன்காப்போம் மருத்துவ முகாமில் சூலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவர், 'தி.மு.க., அ.தி.மு.க.வின் சின்னங்கள் வேறாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஒன்றுதான். தமிழகத்தில் மருத்துவ துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என முதல்வர்கள் மாறி மாறி இருந்தாலும் மக்கள் நலமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டே தமிழக அரசு செயலாற்றி வருகிறது' என்று பேசினார்.

மக்கள் நலன்

தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அரசின் நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் எனது கடமையை விருப்பு வெறுப்பு இன்றி செயலாற்றுகிறேன்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த மாதிரியான நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதால் தி.மு.க.வுக்கு மாற உள்ளதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

உண்மை தொண்டன்

நான் எப்போதுமே அ.தி.மு.க.வின் உண்மை தொண்டன். நான் 1972-ல் மாணவ பருவத்தில் இருந்தே அ.தி.மு.க.வின் உணர்வுப்பூர்வமான தொண்டனாக விரும்பி இணைந்தேன். அன்றில் இருந்து இன்று வரை நான் அ.தி.மு.க. தொண்டனாகவே இருந்து பாடுபடுகிறேன்.

தொண்டனாக இருந்த என்னை ஊராட்சி மன்ற தலைவர் ஆக்கியது அ.தி.மு.க. தான். ஊராட்சி தலைவராக அந்த பகுதியில் மட்டுமே தெரிந்த என்னை ஒரு எம்.எல்.ஏ.வாக உலகுக்கு காட்டியது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தான். அந்த நன்றி மறவாமல் என்றும் எஸ்.பி.வேலுமணியின் கட்சி பணிக்கு உறுதுணையாக இருந்து அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே எனது இலக்காகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்