மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சி கூட்டம்
திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகர பொறியாளர் சிவபாதம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் வாசிக்க கவுன்சிலர்கள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.
ஸ்ரீரங்கத்தில் யாத்ரிநிவாஸ் கட்டுவதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு மாற்று இடத்தை அறநிலையத்துறை இதுவரை மாநகராட்சிக்கு வழங்கவில்லை என்று கவுன்சிலர் ஒருவர் கேள்வி எழுப்பினார். மேயர் அன்பழகன் பேசும்போது, ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் அருகே கொள்ளிடக்கரையையொட்டி 8 ஏக்கர் இடம் உள்ளது. அதில் 6 ஏக்கர் இடத்தில் சுற்றுலா பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் ஸ்ரீரங்கம் பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்லும். அங்கு சுற்றுலா பஸ்கள் நிறுத்தப்படாது என்றார்.
காலை உணவுத்திட்டம்
மற்றொரு கவுன்சிலர் பேசும்போது, "மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது. அதேநேரம் ஒரே இடத்தில் சமைத்து அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் எடுத்து செல்வது என்பது சற்று கடினம். ஏனென்றால் திருச்சி மாநகரில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆகையால் ஒரு இடத்தில் மட்டும் சமைக்காமல் பல்வேறு பகுதிகளில் பிரித்து கொடுத்தால் குழந்தைகள் உரிய நேரத்தில் சாப்பிட முடியும்" என்றார்.
மேயர் கூறும்போது, காலை சிற்றுண்டி அதிகாலை முதலே தயாரித்து 8 மணிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பணியில் 4 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. தேவைபடும்பட்சத்தில் கூடுதல் வாகனங்களை வைத்தும் உரிய நேரத்தில் உணவு கொண்டு சேர்க்கப்படும் என்றார். அப்போது கவுன்சிலர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றனர்.
போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இடங்களில் சாலையோர கடைகள் அமைக்க அனுமதி தருவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்காக, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி கொடுக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இந்நிலையில் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாநகராட்சி கூட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். அதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மின் கட்டண உயர்வு குறித்து மாநகராட்சி கூட்ட மன்றத்திலேயா? கேள்வி எழுப்புவது என்று கேட்டனர். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்வதாக கூறி சென்றனர்.
சாலையோரம் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க செல்லும்போது ஒரு சிலர் தடுத்து கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். ஆகவே மாடுபிடிக்க செல்லும் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் செல்லும் அளவுக்கு பாதை அமைத்து கொடுத்தால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பயனாக இருக்கும். ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதி மக்கள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும், 1-வது வார்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டித்தர வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.
பூங்காக்கள் பராமரிப்பு
மேலும், ஓயாமரி சுடுகாடு கொட்டகையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேயர் கூறுகையில், மாநகராட்சியில் புதிதாக 36 இடங்களில் ஆரோக்கிய மையம் அமைக்கப்பட உள்ளது. அங்கு ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.