அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2022-07-11 23:00 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'பொதுக்குழு அறிவிப்பு சட்டவிரோதமானது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் 15 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட்டது.

அரசியல் பரபரப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கின் தீர்ப்பை திங்கட்கிழமை (நேற்று) காலை 9 மணிக்கு வழங்குவதாக அறிவித்தார். அதாவது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று காலை 9.15 மணிக்கு என்றும், அதற்கு தடை கேட்ட வழக்கின் தீர்ப்பு 9 மணிக்கு என்றும் அறிவிக்கப்பட்டு இருந்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில். இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க சரியாக காலை 8.55 மணிக்கு நீதிபதி கோர்ட்டு அறைக்கு வந்தார். காலை 9 மணி ஆனதும் அவர் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு உள்கட்சி விவகாரம் சார்ந்தது. உள்கட்சி விவகாரத்தில் சாதாரணமாக கோர்ட்டு தலையிடுவது இல்லை. அது கோர்ட்டு செல்லக்கூடாத பகுதியாகும்.

இறுதி முடிவு

ஜனநாயக முறைப்படி, உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, பொதுவிதிகள் மூலம்தான் அதை தீர்க்க வேண்டும். பெரும்பான்மையினரின் முடிவே அதில் இறுதியாகும். அதில் கோர்ட்டு தலையிடாது. கட்சிக்குள் ஏற்படுகின்ற பிரச்சினையை கட்சியின் விதிகளின்படிதான் தீர்வு காணவேண்டும்.

மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களில், 2 ஆயிரத்து 190 பேர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கடந்த ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் வைத்தே கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். அதன்படி பொதுக்குழு 11-ந்தேதி நடைபெறும் என்று அன்றே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறிவிப்பு செல்லும்

இதுகுறித்து ஊடகங்கள் வழியாக மிகப்பெரிய விளம்பரமும் செய்யப்பட்டது. கட்சி விதி 19 (7) -ன்படி பொதுக்குழு கூட்டுவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறவில்லை. எனவே, பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து கடந்த பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டு விட்டதால், இது சட்டப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இந்த வழக்கில், கட்சி உறுப்பினர்களின் செல்வாக்கை பெற வேண்டிய மனுதாரர் இந்த கோர்ட்டை ஒரு கரு வியாக பயன்படுத்தியுள்ளார்.

உள்கட்சி விவகாரம்

பொதுக்குழுவை எதிர்கொள்வதற்கு பதில், ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள மனுதாரர் கோர்ட்டுக்கு ஓடி வந்துள்ளது துரதிருஷ்டவசமானது ஆகும். அவர் பொதுக்குழுவில் பங்கேற்று கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்யப்போகிறேன் என்பதை உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறி, அவர்களது நம்பிக்கையையும், ஆதரவையும் பெறவேண்டும். ஆனால், கட்சி வழியாக சாதிக்க முடியாத மனுதாரர் இந்த ஐகோர்ட்டு மூலம் சாதிக்க முயற்சிக்கிறார்.

ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் கருத்துக்கு, ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, இதுபோன்ற உள்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில் இருந்து இந்த ஐகோர்ட்டு விலகி கொள்கிறது.

தடை இல்லை

ஒரு கட்சியின் விதியை திருத்த பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு விதியை திருத்தும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் அந்த பொதுகுழுவில்தான் முறையிட வேண்டும். ஒருவேளை அந்த நபரை முறையிடவிடாமல் தடுத்தால், அவரது உரிமை பாதிக்கப்பட்டால், அவர் தாராளமாக சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும்.

ஒரு கட்சியின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை சரி செய்யவும், கட்சியின் பொதுக்குழுதான் விதிகளை உருவாக்கும். ஒரு அரசியல் கட்சியின் உள்விவகாரத்தில் இந்த ஐகோர்ட்டு பொதுவாக தலையிடாது.

எனவே பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் இந்த மனுவை ஏற்க முடியாது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். அதற்கு தடை இல்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்