ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-06-30 07:01 GMT

சென்னை,

சென்னை வானகரத்தில் கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இதில் தலையிட முடியாது என கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய ஐகோர்ட்டு அமர்வு, ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம் என்றும் மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் ஆனால் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்தார். மேலும், அதிமுக கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி, தமிழ் மகன் உசேன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.s

அதுமட்டுமின்றி அதிமுக கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பதனால் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்றும், அவைத்தலைவர் நியமனத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டுமென்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்தனர்.

ஆனால், வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை விசாரிக்க முடியாது என கூறு அந்த மனுவை ஏற்க திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதன் மூலமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் ஜூலை 4-ம் தேதி இரு நீதிபதிகள் அமர்வுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு நடைபெற்ற உள்ள மண்டபத்தில் முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்