அ.தி.மு.க. பொதுக்குழு: மேல்முறையீட்டு வழக்குகள் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-25 00:24 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரியும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வக்கீல்கள் வாதம் முடிந்துவிட்டது. இந்தநிலையில் பிற மனுதாரர்களுக்கு மூத்த வக்கீல்கள் சி.மணிசங்கர், அப்துல் சலீம், ஸ்ரீராம் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியபிறகு, மறைந்த ஜெயலலிதா மட்டுமே கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.

விருப்பம் இல்லை

அப்போது, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை. ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சி விதிகளை மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் பெறாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது. கட்சி உறுப்பினரையோ, நிர்வாகியையோ நீக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே உள்ளது. திடீரென ஒற்றைத் தலைமை என்ற கோஷத்தை அவர்களே எழுப்பி, அவர்களே அதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இது ஒன்றரைக் கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம் கிடையாது என்று அவர்கள் வாதிட்டனர்.

தள்ளிவைப்பு

அதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, 'பொதுச்செயலாளரின் நடவடிக்கைகள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்ற விதி உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களிலும் இதே விதிதான் பின்பற்றப்பட்டது. அந்த அடிப்படை கட்டமைப்பு தற்போது மீண்டும் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் முன்வைத்த வாதங்களை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது. தற்போது 4-வது முறையாக ஐகோர்ட்டை நாடி 50 மணி நேரத்தை பயன்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த அடிப்படைத் தொண்டர்களின் ஒருமித்த குரலாகவே பொதுக்குழுவை கருதவேண்டும்' என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 8-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்