திருமானூர் ஒன்றிய குழு கூட்டத்திலிருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

போதிய நிதியை ஒதுக்கக்கோரி திருமானூர் ஒன்றிய குழு கூட்டத்திலிருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-07-27 19:15 GMT

ஒன்றிய குழு கூட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய பெருந்தலைவர் சுமதி தலைமை தாங்கினார். வட்டார மேலாளர் பாஸ்கர் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொய்யாமொழி, ஜெயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைதொடர்ந்து மன்ற பொருள் மற்றும் செலவினங்கள் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

2-வது வார்டு செந்தில்குமார் (அ.தி.மு.க.):- எங்கள் பகுதியில் பாழடைந்து பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகத்தை இடிக்க 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

3-வது வார்டு தங்கம் (தி.மு.க.):- பூதங்காத்த ஏரிக்கரை வழியாக விவசாயிகள் தங்கள் வயலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ஏரிக்கரையை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

19-வது வார்டு திரிசங்கு (தி.மு.க.):- 19-வது வார்டில் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதங்களாக டெண்டர் விடப்படவில்லை. இதனால் சாலை பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டரை விட்டு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

13-வது வார்டு மதியழகன் (அ.தி.மு.க.):- பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போதும் இயங்கி வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்டி கடைகளை ஏலம் விட்டு ஒன்றிய அலுவலகத்திற்கு வருவாய் ஈட்ட வேண்டும். இதற்கு தற்போதே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறுகையில் தற்போது உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என மறுப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்து தொடர் குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கினர்.

12-வது வார்டு கவிதா (அ.தி.மு.க.):- சாலையின் நடுவே விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பத்தை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

இதையடுத்து, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்றிய குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுகையில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்களுக்கு மட்டும் தேவையான நிதி வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு போதிய நிதி வழங்குவது இல்லை. மேலும் என்ன கோரிக்கை வைத்தாலும் செய்கிறோம் செய்கிறோம் என கூறியே நாட்களை கடத்துகிறார்கள். எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

பழைய ஊராட்சி ஒன்றிய வளாக கட்டிடத்தில் இயங்கி வரும் கடைகளுக்கு வாடகை வாங்கப்படுகிறதா? இல்லையா? என்பது குறித்த எந்தவித கணக்கும் காட்டவில்லை. எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்