தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வாய்மேடு:
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்தியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
ஜெகதீஷ் (துணைத்தலைவர்):- தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் மாணவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மண்பானையில் குடிநீர் வைக்க வேண்டும்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
செல்வி சேவியர் (தி.மு.க.):- நீர்முளை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு குறித்து கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஞானசேகரன் (மார்க்.கம்யூ):- நத்தப் பள்ளம் முதல் செம்பியவேளூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகதீஷ், ரம்யா, முத்துலட்சுமி, தீபா ஆகிய 4 உறுப்பினர்களும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பயணிகள் நிழலகம்
மாசிலாமணி (தி.மு.க.):- கோவில் பத்து பகுதியில் அமைந்துள்ள பிலாற்றங்கரையின் இரண்டு புறமும் மண்சாலையாக உள்ளது. இதை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்.
மகேந்திரன் (இ.கம்யூ):- காடந்தேத்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீள் குடியிருப்பு வீடுகள் உள்ள பகுதியில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மையம் அமைத்து தர வேண்டும்.
உதயகுமார்(தி.மு.க.):-தமிழக அரசு குடும்பத் தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு முன்பு ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
கஸ்தூரி குஞ்சையன் (தி.மு.க.):- வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.
கோரிக்கைகள் படிப்படியாக...
தமிழரசி (தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகளை முன்னுரிமைகளின் அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் அலுவலக மேலாளர் மணிமுத்து நன்றி கூறினார்.