அ.தி.மு.க. மாநாட்டில் 25 லட்சம் பேருக்கு உணவு ஆர்.பி.உதயகுமார் பேச்சு

அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்கும் 25 லட்சம் பேருக்கும் சுட, சுட உணவு வழங்கப்படும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2023-08-14 20:15 GMT


அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்கும் 25 லட்சம் பேருக்கும் சுட, சுட உணவு வழங்கப்படும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மரக்கன்றுகள்

ஜெயலலிதா பேரவை சார்பாக, ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு பொதுமக்களை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, மதுரை புறநகர் (தெ) மேற்கு ஒன்றியம் குமாரத்தில் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக உள்ளது. ஆட்சியை பிடிப்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி விட்டது. மக்களும் அதனை தற்போது புரிந்து கொண்டார்கள். எனவே இனி தி.மு.க.வின் அறிவிப்புகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் மக்களிடையே கெட்ட பெயர் எடுத்த ஒரே அரசு தி.மு.க. அரசு தான். அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இப்போது சீர்கெட்டு போய் உள்ளது. எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்தார். அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும் என்று மக்கள் பேச தொடங்கி விட்டனர்.

65 ஏக்கரில்...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2 விஷயங்கள்தான் முக்கியம். ஒன்று கலைஞரின் புகழ் பரப்ப வேண்டும். மற்றொன்று தனது மகன் உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும். தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதி தீண்டாமை அதிகரித்து வருகிறது. மாமன்னன் படம் எடுத்த இயக்குனரை ஸ்டாலின் நேரில் சென்று பாராட்டுகிறார். ஆனால் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும், அதே போல் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்த விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதல்-அமைச்சருக்கு நேரம் இல்லை.

கடந்த 100 நாட்களில் அ.தி.மு.க.வில் 2 கோடியே 4 ஆயிரம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆகி உள்ளனர். அவரது தலைமையில் மதுரையில் வருகிற 20-ந் தேதி வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு முதலில் 25 ஏக்கரில் நடந்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது 65 ஏக்கரில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 25 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சுட, சுட உணவு வழங்க வேண்டும், சாதம் குழைவாக இருக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

தற்போது ஆடி மாதம் என்பதால் காற்று அதிகமாக உள்ளது. அதனால் மைதானத்தில் தூசி ஏற்பட்டு தொண்டர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் மைதானத்தில் 35 ஏக்கரில் தரையில் விரிப்பான் (மேட்) அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, எஸ்.எஸ்.சரவணன், தமிழரசன், மாணிக்கம், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் இளங்கோவன், துணை செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்