அ.தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு திறப்பு விழா காண்கிறது -எடப்பாடி பழனிசாமி அறிக்கை

ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு களுக்கு பிறகும் அ.தி. மு.க. அரசின் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு திறப்பு விழா காண்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-12 23:50 GMT

சென்னை,

சேலத்தில் மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்து பேசும்போது முதல்-அமைச்சர், "மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை என்றும், மக்கள் விரோதிகளை பற்றி பேச ஏது நேரம்" என்றும் பேசியிருக்கிறார். யார் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் நலனை பற்றி சிறிதும் கவலைப்படாமல், குடும்ப நலனை மட்டுமே மையப்படுத்தி ஆட்சி செய்பவர்கள் யார்? தலைமை பொறுப்பில் அப்பா, மகன், பேரன் இவர்களுக்குப்பிறகு கொள்ளுப்பேரனுக்கு மகுடம் என்று வாரிசு அரசியல் செய்பவர்கள் யார்?

இவர்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாவட்டந்தோறும் அப்பா, பிறகு மகன் என்று தேர்தலில் நின்ற தி.மு.க.வின் மாவட்ட குறுந்தலைவர்கள் யார்? வாழையடி வாழையாக தி.மு.க. என்ற நிறுவனத்தை நாங்கள்தான் நடத்துவோம்; தொண்டர்கள் என்பவர்கள் எல்லாம் பல்லக்கு தூக்கிகள்தான் என்று கொக்கரிக்கும் மனோபாவம் கொண்ட, மன்னர் பரம்பரையை தோற்கடிக்கும் தி.மு.க. அரசின் சர்வாதிகார மனோபாவத்தை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என்று சொன்ன முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அரசால் கட்டப்பட்ட சேலம் மாநகர் பஸ் நிலையத்துக்கு தனது தந்தை பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளார். முதல்-அமைச்சர் திறந்து வைத்த பெரும்பான்மையான பணிகள் அ.தி. மு.க.வின் அரசால் தொடங்கப்பட்டவை.

நகர்வலம்

கடந்த 2 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்துக்கு என்று புதிதாக எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவராத முதல்-அமைச்சர், மக்கள் பணி செய்யவே நேரமில்லை என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. எனது தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டு 2 வருட கால தாமதத்துக்கு பிறகு, திறப்பு விழா நடத்தியுள்ள திட்டங்களை, ஏதோ தான் கொண்டுவந்ததுபோல் 'ஸ்டிக்கர்' ஒட்டி நாடகமாடி, ஊரில் கல்யாணம், மார்பில் சந்தனம் என்ற ரீதியில் நகர்வலம் வருகிறார்.

66-வது தேசிய விளையாட்டு போட்டிகளுக்காக தமிழகத்தின் சார்பாக தேர்வான 247 மாணவர்களில், ஒரு மாணவரை கூட அனுப்பாத விவகாரத்தில் அமைச்சர்கள் 2 பேரும் அதிகாரிகள் மீது பழிபோட்டு தப்பித்தாலும், தமிழக மக்கள் இவர்களுக்கு சரியான பதிலை நாடாளுமன்ற தேர்தலில் அளிப்பார்கள். கொதிப்படைந்த தமிழக மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்.

ஓராண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த நிலையில், கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளோடும் மெகா கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்வது பற்றியே சிந்திக்கும் முதல்-அமைச்சருக்கு தமிழக மக்களை பற்றி சிந்திக்க நேரமேது? மீதமுள்ள 35 மாத காலத்தையும், பொய்யையும், புனை சுருட்டையும் மூலதனமாக கொண்டு அப்பாவி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி, ஆட்சி அதிகாரத்தில் தொடரலாம் என்ற இருமாப்பில் இருக்கும் 'திராவக மாடல்' ஆட்சியாளர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்