அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அ.தி.மு.க. சார்பில் கோலமிட்டு நூதன போராட்டம்
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அ.தி.மு.க. சார்பில் தெருவில் கோலமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகையை கட்டுப்பாடுகள் இன்றி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இந்த கோரிக்கையை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அ.தி.மு.க. வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் சென்னை தண்டையார்ப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் 300 பெண்கள் நேற்று கோலமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'தகுதியை நீக்கி அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்' என்பது போன்ற வாசகங்களுடன் கோலங்கள் போடப்பட்டன. இந்த கோலங்களை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தகுதியின் அடிப்படையில் வழங்குவது ஏமாற்று வேலை ஆகும். எனவே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்ப தலைவிகள் கோல வடிவில் தங்கள் உரிமை போராட்டமாக இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. வடக்கு கிழக்கு மாவட்ட பொருளாளர் கணேசன், பகுதி செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், எம்.என்.சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர்கள் நாகரத்தினம், மகேஷ், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.