அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி

அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.

Update: 2023-04-30 19:24 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள சுற்றுலா தலமான அடைக்கல அன்னை ஆலயம், வீரமாமுனிவரால் கட்டப்பட்டு பாடல்பெற்ற ஆலயமாகும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆசிய கண்டத்திலேயே பெரியதான 53 அடி உயர அடைக்கல மாதா வெண்கல சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆலயத்தின் 292-ம் ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை தங்கசாமி மற்றும் உதவி பங்குத்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தொடங்கிய திருவிழாவில் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் ஆலயத்தின் பங்குத்தந்தை ஆகியோரால் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ேதரில் அடைக்கல அன்னை சொரூபம் அலங்கரித்து வைக்கப்பட்டது. இதையடுத்து பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் ஆகியோரால் தேர்பவனி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக இழுத்து சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். திருவிழாவின் 2-வது நாளான நேற்று சிறப்பு திருப்பலி உய்யகொண்டான் திருமலை பங்குத்தந்தை அம்புரோசால் நடத்தப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இதில் அரியலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி இரவு நேரங்களிலும் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. திருவிழாவையொட்டி சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்