ஜல்லிக்கட்டு விழாவை காண கவர்னர் வந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்-அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட கவர்னர் வந்தால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறினார்.

Update: 2023-01-13 18:37 GMT


மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட கவர்னர் வந்தால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக வாடிவாசல், மாடுகளுக்கு பரிசோதனை செய்யும் இடம், மாடுகளை வரிசையாக நிற்க வைக்கும் இடம், மாடுகள் சேகரிக்கும் இடம், பார்வையாளர்கள் அமரும் பகுதி உள்ளிட்ட இடங்களில் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு

இந்தநிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, கலெக்டர் அனிஷ்சேகர், கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, போலீஸ் துணை கமிஷனர் சாய்பிரனீத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக, மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முடிவு எதுவும் எட்டப்படாததால், மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிகட்டை அரசு நடத்துகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலோசனை குழு முன்னிலையில் நடைபெறும்.

கவர்னர் வருகை

ஆன்லைன் முன்பதிவு விண்ணப்பங்களில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய காளைகள், மாடுபிடி வீரர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பரிசு வழங்குவதில் எந்த ஒரு குளறுபடியும் இருந்ததில்லை. வருங்காலங்களிலும் இருக்காது. கடந்த ஆட்சியில் நடந்த குளறுபடிபோல் இந்த ஆண்டு இருக்காது.

தமிழக கவர்னர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட வந்தால் தேவையான முழு பாதுகாப்பை காவல்துறை வழங்கும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்