திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி இடையே கூடுதல் பஸ் வசதி

அரசுஊழியர்கள், மாணவர்கள் வசதிக்காக திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி இடையே கூடுதல் பஸ் வசதி போக்குவரத்துதுறை செயலாளருக்கு பா.ஜ.க. கோரிக்கை

Update: 2022-12-31 18:45 GMT

திருக்கோவிலூர்

பா.ஜ.க. மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளரும், திருக்கோவிலூர் தொழிலதிபருமான கார்த்திகேயன் தமிழக போக்குவரத்துதுறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நகராக இருந்த திருக்கோவிலூரை புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டதால் திருக்கோவிலூர் நகரம் அதன் முக்கியத்துவத்தை இழந்து காணப்படுகிறது என்று தான் குறிப்பிட வேண்டும். ஏனென்றால் மாவட்டத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் திருக்கோவிலூர் நகராட்சி புறக்கணிக்கப்படுகிறது. இங்கிருந்து மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சிக்கு செல்ல சரியான பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைகின்றனர். தனியார் பஸ்கள் கொள்ளை லாபம் கிடைக்கின்ற வகையில் முக்கிய நேரங்களில் மட்டும் அவை இயக்கப்படுகிறது. இந்த முரண்பாட்டை போக்கி சாமானிய மக்களும் அரசு பஸ்சை பயன்படுத்துகிற வகையில் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி இடையே ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு பஸ் என்ற நிலையை உருவாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்