2 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பு: அ.தி.மு.க. மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துவிட்டோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2023-08-04 19:33 GMT

அ.தி.மு.க. பொன் விழா மாநாடு

1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. பொன் விழா ஆண்டில் கால் தடம் பதித்துள்ளது. மதுரையில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. பொன் விழா மாநாடு நடைபெற உள்ளது. மதுரை ரிங் ரோடு வலையன்குளம் சந்திப்பில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு மேடை, பந்தல் அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு என்று சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு குழுக்களையும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இந்த நிலையில் மதுரை மாநாட்டு பணிகள் குறித்து அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இந்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்பட முக்கிய நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் எடப்பாடி பழனிசாமி, 'அ.தி.மு.க.வின் பொன் விழா மாநாட்டை இந்திய நாடே உற்றுநோக்கும் வகையில் நடத்தி காட்ட வேண்டும். அ.தி.மு.க.வினர் குடும்பத்தினருடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக மதுரையை சுற்றி உள்ள 11 மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் பங்கேற்க வேண்டும். சுமார் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

மாநாட்டில் கலந்துகொள்ள வரும் அனைவருக்கும் தரமான உணவு, சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். நாம் பிளவுப்பட்டு கிடக்கிறோம் என்று விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆனால் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து நாம் சாதித்து காட்டி இருக்கிறோம்' என்று பெருமிதத்துடன் பேசியதாக தெரிகிறது.

தனித்தனியாகவும் ஆலோசனை

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம், மாநாட்டுக்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள்? எவ்வளவு பேரை அழைத்து வருவீர்கள்? எத்தனை வாகனங்கள் ஏற்பாடு செய்வீர்கள்? போன்ற விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு மாவட்ட செயலாளர்கள் அளித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு சணல் பை ஒன்று வழங்கப்பட்டது. அதில் காரில் ஓட்டுவதற்காக மதுரை மாநாடு சின்னத்தின் 'ஸ்டிக்கர்' போன்றவை இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பலர் தங்கள் சட்டை பையில் இந்த மாநாட்டு சின்னத்தின் 'பேட்ஜ்' அணிந்திருந்தனர்.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இல்லை

மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா மாநாடு வருகிற 20-ந் தேதி காலை முதல் மாலை வரையில் என நாள் முழுவதும் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. கொடி ஏற்றுதல், தீர்மானங்கள் நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய நிர்வாகிகள் உரை நிகழ்த்த உள்ளனர். கடைசியில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த மாநாடு அ.தி.மு.க. கட்சி சார்ந்தது. முழுக், முழுக்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கானது. எனவே இந்த மாநாட்டில் பா.ஜ.க. போன்ற கூட்டணி கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படாது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்