தருமபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் ஆதார் அட்டைகளை புதுப்பிக்க நாளை சிறப்பு முகாம்

Update: 2023-01-25 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நாளை 4 இடங்களில் ஆதார் அட்டைகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்கள் நடப்பதாக கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆதார் புதுப்பிப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெறவும், வங்கி தொடர்பான சேவைகளை பெறவும் பயன்படுகிறது. இந்தநிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.

கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை புதுப்பித்து கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம். அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்து கொள்ளலாம்.

சிறப்பு முகாம்

ஆதார் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2-வது கட்டமாக ஆதார் சிறப்பு முகாம்கள் தர்மபுரி ஒன்றியம் சோகத்தூர், பாலக்கோடு ஒன்றியம் எர்ரனஅள்ளி, காரிமங்கலம் ஒன்றியம் கும்பாரஅள்ளி, அரூர் ஒன்றியம் தொட்டம்பட்டி ஆகிய இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதாரை புதுப்பித்து கொள்ள தேவையான ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.50 ஆகியவற்றுடன் தங்கள் ஆதார் அட்டைகளை புதுப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்