வீடுகளை குத்தகைக்கு விட்டு நடிகர்-நடிகையிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி

சென்னையில் வீடுகளை குத்தகைக்கு விட்டு நடிகர், நடிகையிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட பெங்களூரு ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-09 23:50 GMT

சென்னை,

சென்னையில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, பின்னர் அந்த வீடுகளை உரிமையாளருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு குத்தகைக்கு விட்டு, குத்தகைக்கு எடுத்தவரையும், வீட்டு உரிமையாளரையும் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சுருட்டும் மோசமான கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இந்த மோசடியில் ஈடுபட்டு வருபவர் பெங்களூருவைச் சேர்ந்த ஆசாமி ஒருவர். இவர் ஏற்கனவே பல்வேறு மோசடி வித்தையில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்.

தற்போது இந்த புதுமையான மோசடி லீலைகளை ஓசை இல்லாமல் அரங்கேற்றி விட்டு, தலைமறைவாகி விட்டார்.

நடிகர்-நடிகை

இவரது மோசடி வலையில் நடிகர் ஒருவரும், நடிகை ஒருவரும் சிக்கி தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து விசாரணைக்கு வந்து செல்கிறார்கள். நடிகர் பெயர் டேனி என்ற டேனியில். இவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். நடிகை பெயர் பவித்ரா. இவர் தொலைக்காட்சியில் நடித்துள்ளார்.

நடிகர் டேனி ரூ.17 லட்சத்தை இழந்துள்ளார். வீட்டு உரிமையாளர், இவரிடம் வந்து, நீங்கள் யார், என் வீட்டில் வசிக்கிறீர்கள் என்று கேட்டபோதுதான், அதிர்ச்சி அடைந்துள்ளார். வாடகைக்கு எடுத்த வீட்டை, ரூ.17 லட்சத்துக்கு நடிகர் டேனிக்கு குத்தகைக்கு விட்டு, மோசடி நபர் வீட்டு உரிமையாளருக்கும் அல்வா கொடுத்துள்ளார். வீட்டு வாடகையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார். இதுபோல்தான், அதே மோசடி நபர் நடிகை பவித்ராவையும் ஏமாற்றி உள்ளார். அவரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

கைது செய்ய தீவிரம்

இந்த நூதன மோசடி நபரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக உள்ளனர். மோசடி நபர் சென்னையில் இதுபோல நிறைய பேரிடம் பணத்தை சுருட்டி இருப்பதாக தெரிகிறது.

அவர் கைது செய்யப்பட்டால்தான் இதுபற்றி முழுமையாக தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்