மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க நடவடிக்கை

கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் லலிதா கூறினார்.

Update: 2022-08-30 15:10 GMT
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி தற்காஸ் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய வட்டார அளவிலான அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ். தொண்டு நிறுவன குழும தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுவரண்சிங் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவ ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார்.

கைவினை பொருட்கள்

விழாவில், கிராமப்புற மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தொழில் முனைவோர் தங்களது கைவினைப் பொருட்கள், விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள், பாரம்பரிய உணவு தானியங்கள், கால்நடைகளுக்கான இயற்கை உணவுகள், பாரம்பரியமிக்க இயற்கை மருந்துகள் ஆகியவற்றை பார்வைக்கு வைத்திருந்தனர். இதனை சுவரண்சிங், மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது கலெக்டர் லலிதா கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீர்காழி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தரப்படும்.

சுயஉதவிக்குழு பொருட்கள்

கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்களை மேம்படுத்தி அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதில், குழும உதவி மேலாளர் ராஜாராமன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார், அரசு டாக்டர் ராஜகுமாரி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், மருத்துவ அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்