காகித ஆலைக்கு நிலம் கொடுத்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் பேட்டி

காகித ஆலைக்கு நிலம் கொடுத்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2023-05-28 18:51 GMT

பொது மகாசபை கூட்டம்

கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலை எல்.பி.எப். தொழிற்சங்கத்தின் பொது மகாசபை கூட்டம் வேலாயுதம்பாளையம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு புகழூர் காகித ஆலை எல்.பி.எப். சங்க தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் முன்னிலை வகித்தார். எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஊதிய உயர்வு ஒப்பந்தம்

தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர் நமது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வழியில் தொழிலாளர்கள் கேட்ட கோரிக்கைகளை விட கூடுதலான அறிவிப்புகளை வழங்க கூடியவர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் பேசி டி.ஏ.வை இணைத்து 15 சதவீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை குறிப்பிட்ட காலம் முன்பே பெற்று தரப்படும். அதேபோல் நிலையான பஞ்சப்படியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள 50 சதவீதத்தை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தேதியில் இருந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

நடவடிக்கை

வருடாந்திர ஊதிய உயர்வு அடிப்படை சம்பளத்தில் அதிகாரிகளுக்கு உள்ளது போல் சதவீத அடிப்படையில் வழங்கவும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத மருத்துவ செலவு தொகையினை 100 சதவீதமாக வழங்கவும், காகித ஆலைக்கு நிலம் கொடுத்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவும், பதவி உயர்வு கொள்கையில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாநில அமைப்பு செயலாளர் வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்