கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த நடவடிக்கை

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது என சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2023-05-10 21:54 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த ஏதுவாக தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர் ரெயில் பாதையில் புதிய ரெயில் நிறுத்தம் அமைப்பது மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்தை இணைப்பதற்கு நகரும் மேல்மட்ட நடைமேடை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல, மாதவரம் பஸ் நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி அளிப்பது மற்றும் சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

பட்ஜெட் அறிவிப்பு

மேலும், அமைச்சர் சேகர்பாபு 2023-24-ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் அபூர்வா, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்