நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை

நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-14 19:00 GMT

லஞ்ச ஒழிப்பு சோதனை

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. கோட்ட பொறியாளராக சந்திரசேகரனும், உதவி கோட்ட பொறியாளராக மாணிக்கமும், கண்காணிப்பாளராக கோபாலகிருஷ்ணனும் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடம் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பணம் லஞ்சமாக பெறப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

ரூ.8 லட்சம் பறிமுதல்

மேலும் அங்கிருந்த கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் அலுவலர்களின் பீரோக்கள் மற்றும் டேபிள்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த பணம், கோப்புகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பணம் யாருடையது, யார்‌ கொடுத்தது, எதற்காக வழங்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்த சம்பவம் அரசுத்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்