கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

Update: 2023-09-25 18:02 GMT

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, இலவச வீடு வேண்டி, பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனு அளித்தனர்.

மொத்தம் 372 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கோரிக்கை அடிப்படையில்

மேலும் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனுதாரர் அளிக்கும் மனுக்களை கோரிக்கையின் அடிப்படையில் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரித்து, ஏ பிரிவு மனுக்களை உடனடியாக விசாரணை செய்து மனு மீது தீர்வு காண வேண்டும். நிதி தொடர்பான பி பிரிவு மனுக்களை விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு நிதிக்காக காத்திருத்தல் வேண்டும். எளிதாக தீர்வு காணக்கூடிய சி பிரிவு மனுக்களை எவ்வித விசாரணையுமின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நடைமுறையினை பின்பற்றி, எவ்வித காலதாமுமின்றி உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

தனிநபர் மீது புகார்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தில் ஏற்கனவே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதடைந்து உள்ளதால் ரூ.42½ லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலகம், நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என தனிநபர் ஒருவர் புதிய அமைப்பு ஒன்ைற உருவாக்கி இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பழைய கோவில் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதியிடம் புகார் மனு அளித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்