வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோர்ட்டு உத்தரவை மீறி பட்டா கொடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், சிறு பலசரக்கு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மனுக்கள் கொடுத்தனர்.

Update: 2023-06-19 19:15 GMT

சிறுபலசரக்கு வியாபாரிகள்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் கொடுத்தனர்.

தேனி மாவட்ட சிறுபலசரக்கு வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் தனித்தனியாக மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களில், 'எங்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன், தங்களின் நிலப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேவதானப்பட்டி பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கோர்ட்டு உத்தரவையும் மீறி, வேறு ஒரு நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோர்ட்டு உத்தரவை மீறி வருவாய்த்துறையினர் பட்டா கொடுத்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள்

பூதிப்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொடுத்த மனுவில், 'பூதிப்புரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிக்கும் எங்களுக்கு பட்டா கிடையாது. பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். எனவே எங்கள் மீது கருணை காட்டி நாங்கள் வசிக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிடம் பராமரிப்பு இன்றி உள்ளது. விளையாட்டு மைதான பகுதியை சிறுநீர் கழிப்பிடமாக மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். விளையாட்டு மைதானமும் புதர்மண்டிக் கிடக்கிறது. பள்ளி வகுப்பறையில் கல்வித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே, விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, கழிப்பிடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'உத்தமபாளையம் தாலுகா பெட்டிப்புரம் அருகே திம்மரசநாயக்கன்பட்டியில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் ஊரில் உள்ள பள்ளி சமுதாயக்கூடத்தை பூட்டி வைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். பொது அமைதியை கெடுக்கும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே பள்ளி சமையல் அறையை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நவடிக்கை எடுக்கவும் வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே எரதிமக்காள்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொடுத்த மனுவில், 'எரதிமக்கள்பட்டி இந்திரா காலனி பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து தனியார் வீட்டுமனைகளுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்படுகிறது. எனவே எங்களின் மயானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் ஊரில் இருந்து டி.சுப்புலாபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. எங்கள் ஊருக்கு பஸ் வசதியும் இல்லை. எனவே சாலையை சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடை வசதியும் செய்து கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்