மின்னணுக்கழிவுகளை அப்புறப்படுத்தும் விதிகளை மீறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

மின்னணுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

Update: 2022-11-06 18:45 GMT

நாகர்கோவில், 

மின்னணுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மின்னணுக் கழிவுகள்

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்னணுக் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.

மின்னணு கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகளை பிரித்தெடுப்போர், மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் புதுப்பிப்பாளர்களால் மட்டுமே சேகரித்து செயலாக்க முடியும்.

மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகளின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்னணுக் கழிவு பொருட்களைச் சேகரித்து அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்.

5 ஆண்டு சிறை

மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும் இவ்வகையான செயல்களில் ஈடுபடும் மின்னணுக் கழிவுகளை கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் பிரிவு 5-ன் படி அந்நிறுவனத்தை மூடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல்

பொதுமக்கள் மற்றும் மின்னணுக் கழிவுகளை கையாளுபவர்கள் மின்னணுக் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தைத் தவிர்க்கவோ நினைத்தால் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் ெபற வேண்டும்.

பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின்னணுக் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்