பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு நடவடிக்கை

ஏற்காட்டில் ஏற்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் கூறினார்.

Update: 2022-06-28 20:11 GMT

ஏற்காடு:

ஏற்காட்டில் ஏற்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் கூறினார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்காட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகளை மேம்படுத்தவும், குப்பைகளை முறையாக கையாளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குப்பைகளை தெருக்களில் வீசாத வகையில் தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தால் செயல்பட்டு வரும் பயோ மீத்தேன் கியாஸ், பிளாஸ்டிக் மறு சுழற்சி மையம் மூலம் ஏற்காட்டில் உள்ள ஓட்டல்களில் ஏற்படும் மீதி உணவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நடைபாதைகள்

பெரிய ஏரி (படகு இல்லம்), சின்ன ஏரி (அலங்கார ஏரி) ஆகியவற்றின் கரையோரங்களில் காலை, மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்படும். இதுதவிர ஏற்காட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 8 பணிகளும், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் 17 பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் மொத்தம் 158 பணிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் பூபதி, சதீஷ், பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வெங்கடேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக ஏற்காடு படகு இல்ல ஏரி மற்றும் ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள அலங்கார ஏரியை கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது ஏரிகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுரைகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்