உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும் மனுவை தள்ளுபடி செய்பவர்கள் மீது நடவடிக்கை

பட்டா மாற்றத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும் மனுவை தள்ளுபடி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அவசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டார்.

Update: 2022-12-22 18:23 GMT

பட்டா மாற்றத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும் மனுவை தள்ளுபடி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அவசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நத்தம் வகைப்பாடு நிலங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் குறித்து வருவாய் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தணிக்கைத் துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் கிராமங்களில் நத்தம் வகைப்பாடு இடங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிலவரங்கள் குறித்தும் கேட்டறிந்து உள்ளேன். பட்டா மற்றும் அரசு புறம்போக்கு இடங்கள் ஆகியவைகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கிராமங்களில் நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள இடங்கள், நத்தம் வகைப்பாடு ஆகிய இடங்களை கணிணியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் ராணிப்பேட்டை மாவட்டம் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தொடர்ந்து, இதன் மீது கவனம் செலுத்தி முழுமையாக நத்தம் வகைப்பாடு இடங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நடவடிக்கை

அதேபோன்று பொதுமக்கள் பட்டா மாற்றம் வேண்டி அளிக்கும் மனுக்களில் தள்ளுபடி செய்யப்படும் மனுக்கள் குறித்து வருவாய் கோட்டாட்சியர்கள் அளவில் ஆய்வு செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட பட்டா மாற்றம் மனுக்கள் கணிணியில் பயனாளி பதிவேற்றம் செய்யப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பயனாளி முறையாக ஆவணங்களை இணைத்திருந்தால் அதை ஏன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து, அதற்கான உரிய ஆதாரம் இருப்பின் பட்டா மாற்றம் மனுவின் தள்ளுபடி செய்த பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் பட்டா மாற்ற மனுவினை தள்ளுபடி செய்வது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

அலுவலக பதிவுகள் அனைத்தும் இ-ஆபிஸ் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை முதலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படுத்திட வேண்டும். அதற்குப்பின் தாலுகா அலுவலகங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முதியோர் உதவித்தொகை

மேலும் முதியோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களில் தகுதியற்ற நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தால் அதை நீக்கிட வேண்டும். யார் சிபாரிசு செய்தாலும் அவர்களுக்கு வழங்கிட கூடாது. தகுதியான நபர்களுக்கு கட்டாயம் மாதாந்திர உதவி தொகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட இடங்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சிசுந்தரம், நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்