குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- இக்கூட்டத்தில் பள்ளி அளவிலான முதல்மட்ட குழு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு போதுமான அளவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள்
ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேலாய்வு மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளை பள்ளிக்கூடம் மணியடிச்சாச்சு என்ற திட்டத்தின் மூலம் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
15 நாட்களுக்கு மேல் வருகை தராத இடைநின்றல் ஆக வாய்ப்புள்ள குழந்தைகளை இடைநின்றலின்றி மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும்.
நடவடிக்கை
10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 2022-23-ம் பொதுத்தேர்வுகள் எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்போது துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை அவர்களுக்கு விருப்பமான வேறு தொழிற்கல்வி பயிற்சிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களையும், அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.