மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை அடுத்த மாத இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-09-13 16:30 GMT

மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை அடுத்த மாத இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கட்டமைப்பு மேம்பாடு

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவத்துறை சார்ந்த 14 கட்டிடங்கள் ரூ.4 கோடியே 88 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளன. ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திம்மனஅள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட செயல்பாடு குறித்து நேரடி ஆய்வு நடத்தி உள்ளோம்.

காலி பணியிடங்கள்

மருத்துவத்துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை துறைவாரியாக கணக்கெடுப்பு செய்து பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் 4,308 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. 200 டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த மாத இறுதிக்குள் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 88 லட்சத்து 33 ஆயிரத்து 88 பேருக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் 87 ஆயிரத்து 5 பேருக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் ரூ.66 கோடி நிதி ஒதுக்கீட்டில் மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரில் ஆய்வு

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகதாசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஏரியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இவற்றில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் சாந்தி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன். முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்