திருத்தணி அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; 3 பேர் படுகாயம் - போக்குவரத்து பாதிப்பு
திருத்தணி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து இரும்பு தளவாடங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருத்தணி வழியாக சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பகுதியில் உள்ள சாலை வளைவில் லாரி திரும்பிய போது, எதிரே வந்த சரக்கு வாகனம் லாரியில் இருந்த இரும்பு தளவாடத்தில் மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து லாரியை பின்தொடர்ந்து வந்த காரும் லாரியின் மீது மோதியதில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த துளசிராமன் (வயது 30), நாகேந்திரன் (42) ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் துளசிராமனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் லாரி மீது மோதியதில் காரில் வந்த சித்தையா என்பவருக்கும் காயம் ஏற்பட்டு அவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்த 3 வாகனங்கள் மோதி விபத்தால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். லாரியில் கொண்டு வந்த இரும்பு தளவாடங்கள் 2 அடிக்கு வெளியே நீட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.