ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் விபத்து: 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சினிமா கலைஞர் சாவு
ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் படப்பிடிப்பின் போது 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சினிமா கலைஞர் பலியானார்.;
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஏ.ஆர்.ஆர்.பிலீம் சிட்டி என்ற பெயரில் பிரமாண்ட ஸ்டூடியோ உள்ளது. இங்கு படபிடிப்புகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' என்கிற திரைப்படத்திற்கான படபிடிப்புக்குரிய தளம் கடந்த சில நாட்களாக அந்த ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக சுமார் 40 அடி உயரத்தில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சினிமா கலைஞர் குமார் (வயது 47) நேற்று காலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவர் மேலிருந்து கீழே தவறி விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குமாரை, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த லைட்மேன் குமாருக்கு திருமணமாகி ஜீலியட் (38) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருச்சியை சேர்ந்த குமார், கடந்த 17 வருடங்களாக சென்னை சாலிகிராமத்தில் தங்கி சினிமா லைட் மேனாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.