சத்தி அருகே கோவில் திருவிழாவுக்காக வேனில் ஏற்றி வந்த பட்டாசு வெடித்து 6 பேர் படுகாயம்

சத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவுக்காக வேனில் ஏற்றி வந்த பட்டாசு வெடித்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-21 21:17 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவுக்காக வேனில் ஏற்றி வந்த பட்டாசு வெடித்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பட்டாசு வெடித்து காயம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளியில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் கெஞ்சனூரில் உள்ள ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவதற்காக நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். தீர்த்தம் எடுத்துக்கொண்டு வரும்போது வெடிப்பதற்காக வேனில் பட்டாசு வாங்கி வைத்திருந்தனர்.

எதிர்பாராதவிதமாக அந்த பட்டாசு படபடவென்று வெடித்து சிதறியது. இதில் வேனில் இருந்த பக்தர்கள் மீது தீப்பொறி பட்டது. இதனால் அவர்கள், "அய்யோ, அம்மா" என்று அலறினார்கள். இதில் பக்தர்கள் திவாகர், பூபாலன், முத்தான், நரேஷ், கணேஷ், முத்துக்குமார் ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.

அலறியடித்து ஓடினர்

உடனே டிரைவர் வேனை நிறுத்தினார். வேனில் இருந்த மற்ற பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் திவாகர், பூபாலன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். லேசான தீக்காயம் அடைந்த முத்தான், நரேஷ், கணேஷ், முத்துக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்