திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 200 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி- டிரைவர் உயிர் தப்பினார்

திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 200 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2022-12-19 20:31 GMT

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 200 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திம்பம் மலைப்பாதை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் கார், பஸ், லாரி, வேன், சரக்கு வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதை தமிழக-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ளது. குறுகிய வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகின்றன. சில நேரம் பாரம் தாங்காமல் வாகனங்கள் கவிழ்ந்து விடுகின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

லாரி பாய்ந்தது

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசனில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மக்காச்சோள பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் வடுகபட்டியை சேர்ந்த ராமசாமி (வயது 60) என்பவர் ஓட்டினார்.

திம்பம் மலைப்பாதை 14-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது எதி்ர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதில் லாரி நேராக சென்று தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 200 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அங்குள்ள ஒரு மரத்தின் மீது மோதி லாரி கவிழாமல் அப்படியே நின்றது.

டிரைவர் உயிர் தப்பினார்

பின்னர் டிரைவர் ராமசாமி லாரியில் இருந்து வெளியே குதித்தார். இந்த விபத்தில் அவர் எந்த காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு் லாரியை மீட்கும் பணி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்