காரிமங்கலம் அருகே வேன் மோதி பெண் உள்பட 2 பேர் பலி டிரைவருக்கு வலைவீச்சு

காரிமங்கலம் அருகே வேன் மோதி பெண் உள்பட 2 பேர் பலி டிரைவருக்கு வலைவீச்சு

Update: 2022-11-03 18:45 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே வேன் மோதி பெண் உள்பட 2 ேபர் பலியாகினர்.

சத்துணவு சமையலர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை பள்ளியின் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான விஜயகுமார் (40) என்பவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாடகை வேன் மாணவர்களை அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்தது. இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் நடந்து சென்ற அலமேலு, முன்னால் சைக்கிளில் சென்ற விஜயகுமார் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் சாவு

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அலமேலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய விஜயகுமாரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காரிமங்கலம் போலீசார் அலமேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

இந்த விபத்து தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்